குஜராத் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக தலைவர் அமித்ஷா, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம்கான் பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதாவை மட்டும் அவமானப்படுத்தவில்லை. நாட்டிலுள்ள கோடிக்கணக்கான பெண்களை அவமானப்படுத்தியிருக்கிறார். அவர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது குறித்து பேசிய அமித்ஷா, வெறுக்கத்தக்க கருத்துகளை கூறி பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதாவின் தாய்மையை அசாம்கான் களங்கப்படுத்தி விட்டார் என்றும், அசாம்கான் பேசியது குறித்து சமாஜ்வாதி கட்சி, மாயாவதி மற்றும் ராகுல்காந்தி கருத்து கூற வேண்டும் என்றும் கூறினார். மேலும் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பேசினார்.
முன்னதாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி சார்பில் ராம்பூர் மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் அசாம்கான், ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், ராம்பூருக்கு ஜெயப்பிரதாவை நான்தான் அழைத்து வந்தேன். அவரை யாரும் சீண்டாமல் நான் பார்த்து கொண்டதற்கு நீங்கள்தான் சாட்சி. அவரது உண்மை முகத்தை அறிவதற்கு உங்களுக்கு 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், நான் 17 நாட்களிலேயே அவர் காக்கி நிற உள்ளாடை அணிந்திருந்தார் என்பதை தெரிந்து கொண்டேன் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.