இந்திய, சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் பற்றிக்கொள்ள, எல்லை பகுதிகளில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்தது. கிழக்கு லடாக் பகுதியில் 20,000 ராணுவ வீரர்களையும் வடக்கு சிஞ்சியாங் பகுதியில் 10,000 ராணுவ வீரர்களையும் சீனா குவித்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டது
அமைதியை நிலைநாட்டும் வகையில், அமைச்சர்களிடையேயும் உயர்மட்ட ராணுவ அலுவலர்களிடையேயும் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இதனிடையே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பலனாக, குவிக்கப்பட்ட படைகளை விலக்க இரு நாடுகள் முடிவெடுத்துள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங், PP - 15, ஃபிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவத்தின் திரும்பபெறும் நடவடிக்கையை இந்திய தரப்பு தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் திரும்பபெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.