கோவிட்-19 தொற்றுநோயை ஒட்டுமொத்தமாகக் கையாளுதல் மற்றும் ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. ஆனால், பிரதமரின் செயல்பாடுகளுக்கான திருப்தி மதிப்பீடு பாஜக ஆட்சிசெய்யாத மாநிலங்களில் அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வில், பாஜக ஆட்சிசெய்யாத மாநில மக்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் பிரதமர் மோடி எடுத்த செயல்பாடுகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில், ராகுல் காந்தியின் செயல்பாட்டுக்கான திருப்தி மதிப்பீடு 56.78 விழுக்காடாகவும், மோடியின் செயல்பாட்டுக்கான திருப்தி மதிப்பீடு 42.99 ஆகவும் உள்ளது.
அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் மோடியின் திருப்தி மதிப்பீடு 92.73 விழுக்காடாக உள்ளது. அந்த மாநிலத்தில் ராகுல் காந்தியின் திருப்தி மதிப்பீடு 5.41ஆக உள்ளது.
இந்த ஆய்வின்படி, பஞ்சாப் மாநில முதலமைச்சரின் செயல்பாட்டுக்கான திருப்தி மதிப்பீடே குறைவாக உள்ளது. அதன்படி, பஞ்சாப் முதலமைச்சரின் திருப்தி மதிப்பீடு 27.51 விழுக்காடு.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரின் திருப்தி மதிப்பீடான 76.52 விழுக்காடு, மோடியின் திருப்தி மதிப்பீடான 71.48 விழுக்காட்டை விட அதிகமாக உள்ளது.
அதிகபட்ச திருப்தி மதிப்பீடாக பிரதமர் மோடி ஒடிசா, ஆந்திராவில் முறையே 95.6 விழுக்காடு, 83.6 விழுக்காட்டைப் பெற்றுள்ளார். மேலும், கேரளாவில் குறைந்தபட்சமாக 32.9 விழுக்காட்டைப் பெற்றுள்ளார்.
அதேசமயம், மேற்கு வங்க மாநில முதலமைச்சரைவிட கூடுதல் திருப்தி மதிப்பீடாக 64.06 விழுக்காட்டை மோடி பெற்றுள்ளார்.