இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளான இன்று அரசியல் சாசன மதிப்பீடுகளை வலிமையாக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும். இந்திய அரசியல் சாசனம் குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் சரியாக வரையறுக்கிறது. இது அரசியல் சாசனத்தின் சிறப்பம்சமாகும். உரிமைகளும் கடமைகளும் ஒன்றிணைந்த அம்சங்கள் என நமது தேசத்தந்தை காந்தி கூறியுள்ளார். கடமைகளைச் சேவைகளாக நாம் செயல்படுத்தவேண்டும் அரசியல் சாசனம் காட்டும் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றவேண்டும் என ஒவ்வொரு குடிமக்களும் சிந்திக்கவேண்டும்' என்றார்.
மேலும், 'இந்தியக் குடிமக்களாகிய நான் எனத் தொடங்கும் நமது அரசியல் சாசனம் இந்திய மக்களும் அரசியல் சாசனமும் வேறல்ல என்பதைத் தெரிவிக்கிறது. இந்த அரசியல் வகுத்துக்கொடுத்த நமது முன்னோர்களை நாம் என்றும் மறக்காமல் நன்றியுணர்வுடன் நினைவு கொள்ள வேண்டும். இந்தியா இத்தனை ஆண்டுகளாகத் தனது சுதந்திரத்தையும் ஜனநாயக்தையும் உயிர்ப்போடு பாதுகாத்துவருகிறது. நமது அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர் தற்போது உயிரோடு இருந்தால் நம்மைக் கண்டு பெருமை கொண்டிருப்பார். அம்பேத்கர் தொடங்கி அரசியல் சாசனத்தை உருவாகக் காரணமாக இருந்த நமது முன்னோர்களைத் தலை வணங்குகிறேன்' என்றார்.
மேலும், மும்பை பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினமான இன்று தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களைத் தனது உரையில் நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி.
இதையும் படிங்க: அரசியல் சாசன தினத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்