நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. டெல்லியிலுள்ள செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், புதிய சைபர் பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதன் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் 'ஆப்டிகல் பைபர் கேபிள்' மூலம் இணைக்கப்படும்.
இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை களைவதற்கு இக்கொள்கை வழிவகுக்கும். அடுத்த ஆயிரம் நாள்களுக்குள், இந்தியாவிலுள்ள ஆறு லட்சம் கிராமங்கள், ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்படும். கடலுக்கு அடியில் பதிக்கப்படும் ஆப்டிகல் பைபர் கேபிளை பயன்படுத்தி அதி வேக இணைய சேவையின் மூலம் லட்சத்தீவுகளும் இணைக்கப்படும்.
கடந்த ஐந்தாண்டுகளில், 1.5 லட்சம் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது நமது நாட்டில் 1,300 தீவுகள் உள்ளன. புவிசார் முக்கியத்துவத்தைக் கருதி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் வகையில் சில தீவுகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகளில், இணைய சேவையை மேம்படுத்தும் வகையில் கடலுக்கு அடியில் கேபிள் பதிக்கப்பட்டுள்ளது" என்றார் பிரதமர் மோடி.
இதையும் படிங்க: இந்திய இறையாண்மை மீதான மரியாதை அனைத்துக்கும் மேலானது - பிரதமர் மோடி