இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மது, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
தற்போது ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு தீநுண்மி தொற்றால் பாதிக்கப்படாத இடங்களில் மது விற்பனைக்கு அனுமதித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் குடிமகன்கள் கால்கடுக்க நின்று மதுவை வாங்கி குடித்து தங்கள் சேமிப்புப் பணத்தை அரசுக்கு அளித்துள்ளனர்.
இந்நிலையில் குடிப்பழக்கம் என்பது கோவிட்-19 பரவலுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குடிபோதையில் இருக்கும் நபர், தனது நடவடிக்கைகள் மூலம் பலருக்கு தீநுண்மியைக் கடத்த முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
பரிந்துரைத்த அளவைவிட அதிகமான மதுவை உட்கொண்டால் அது மனிதர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறைத்து நிமோனியாவுக்கு வழிவகுக்கும் என்று 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. மனித உடலில் தீநுண்மி தொற்றுகளுக்கு எதிராகப் போராடும் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை மது குறைத்துவிடும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தவிர குடிப்பழக்கம் காரணமாக வீடுகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் பல மடங்கு அதிகரிக்கும் இடர் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வன்முறைகள் பல சமயங்களில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
கோவிட்-19 பரவத் தொடங்கிய பிப்ரவரி மாதமே மது விற்பனையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொருளாதார மீட்டெடுப்புத் திட்டத்தை அறிவிக்கத் தயாராகும் இந்தியா!