இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து பாரத் பயோடெக் லிமிடெட் உருவாக்கிவரும் கோவாக்சின் தடுப்பூசி, வரும் ஆண்டின் தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியின் மூன்றாம்கட்டப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மனிதர்கள் மீது நடத்தப்படும் இந்த மூன்றாம் கட்டப் பரிசோதனையில் பங்கேற்க தன்னார்வலர்கள் பலர் முன்வந்துள்ளதாக முன்னதாகக் கூறப்பட்டது. இந்த மனிதர்கள் மீதான பரிசோதனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட நாடு முழுவதும் 12 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவாக்சின் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளுக்கு தன்னார்வலர்கள் முன்வரத் தயங்குவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்த மூன்றாம் கட்டப் பரிசோதனைகளுக்கு தங்களுக்கு சுமார் ஆயிரத்து 500 தன்னார்வலர்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை 200 பேர் மட்டுமே முன்வந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மருத்துவனையின் மனிதர்கள் மீதான பரிசோதனைக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும் மருத்துவருமான சஞ்சய் ராய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த மூன்றாம்கட்டப் பரிசோதனை வெற்றிகரமாக முடிவடையும்வரை தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து முழுமையாக அறிய முடியாது. இதனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வருவதில் கால தாமதமாகலாம் எனவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கோவாக்சின் தடுப்பூசி