புதுச்சேரி ஏஎப்டி அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் வீரமுத்து இன்று புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நிறுவனமாக இருந்த ஆங்கில பிரெஞ்சு நூற்பாலை உலக நாடுகளுக்குத் தரமான 600 வகையான துணிகளை உற்பத்தி செய்து, மத்திய அரசுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தந்தது.
ஆலையில் அரசின் உயர் அலுவலர்கள் கொண்ட இயக்குநர்கள் குழு எடுக்கும் கொள்கை முடிவுகளில் இயங்கி வந்தது. 35 ஆண்டுகளில் வேலைநிறுத்தம் இருந்ததில்லை. ஆனால், தற்போது நிர்வாகத் திறமையின்மையாலும் ஒவ்வொரு நாளும் நிபுணர்கள் அளித்த ஆலோசனைகளை அரசும் ஆலை நிர்வாகமும் புறக்கணித்ததாலும் நலிவடைந்து, தற்போது மூடும் நிலைக்கு ஏஎப்டி மில் தள்ளப்பட்டுள்ளது.
விஜய்யின் கமிட்டி அறிக்கை படி, அரசு நிறுவனங்களை மூட உத்தரவிடுவது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பஞ்சாலையை இயக்க அரசு மூலம் வழங்கும் வேட்டி, சேலையில், பள்ளிச் சீருடைகளை மில்லுக்கு ஆர்டர் கொடுக்கும் பட்சத்தில் ரூபாய் 25 கோடியில் மில்லை இயக்க முடியும். அரசு கூறும் நிபந்தனைகளை ஏற்கத் தொழிலாளர்கள் தயாராக உள்ளனர்.
மில்லுக்குத் தற்போது ஆயிரத்து 526.25 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. எனவே, மில்லைத் தொடர்ந்து இயக்கவேண்டும். மூடக்கூடாது தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய 13 மாத நிலுவை சம்பளம் உள்ளிட்ட ரூபாய் 112 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இக்குழு நிர்வாகிகள் துரை, வாழமுனி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின் போது உடனிருந்தனர்.