மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அத்வானி களமிறங்குவார் என்று எதிர்பார்த்த சூழலில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அந்தத் தொகுதியில் களமிறங்குகிறார். கட்சியின் இந்த முடிவால் பாஜகவில் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை பாஜக கட்சி தொடங்கப்பட்ட நாள் கொண்டாடப்பட உள்ளது. அக்கட்சி 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, பைரோன்சிங் ஷெகாவத் உள்ளிட்ட தலைவர்களால் தொடங்கப்பட்டது.
இச்சூழலில் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான அத்வானி தனது வலைதள பக்கத்தில், “ஜனநாயக மரபுகளை கட்சிக்குள்ளும், பரந்துபட்ட தேசிய மட்டத்திலும் பாதுகாப்பது என்பது பாஜகவின் பெருமைக்குரிய அடையாளமாகும்.
இந்திய ஜனநாயகத்தின் சாராம்சம் பன்முகத்தன்மையை மதித்தல், பேச்சு, கருத்து சுதந்திரம் ஆகும். பாஜக தொடங்கியது முதல் நம்முடன் அரசியல் ரீதியாக உடன்படாதவர்களை நாம் விரோதிகளாகப் பார்த்ததில்லை. அதேபோல் இந்திய தேசியம் என்ற நம் கருத்தாக்கத்தில் அரசியல் ரீதியாக நம்முடன் முரண்படுபவர்களை நாம் 'தேச விரோதிகள்' என்று ஒருபோதும் கருதியதில்லை. சுதந்திரம், ஜனநாயகம், நேர்மை, நியாயம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதில் பாஜக எப்போதும் முன்னிலையில் இருந்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.
'பாஜகவுக்கு எதிராக கருத்து கூறுபவர்களை அக்கட்சியின் தலைவர்கள் சிலர் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தினர். மேலும், பெங்களூருவில் செய்தியாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பாஜக மேல் பெரும்பான்மையான மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டுவரும் சூழலில் தற்போது இந்தப்பதிவு மூலம் அத்வானியே பாஜகவின் செயல்பாடுகளை மறைமுகமாக சாடியிருக்கிறார்' என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.