புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்பளத்தில் ஒரு பங்கை பிடிக்க இருப்பதாகவும், அரசு ஊழியர்கள் பல்வேறு தியாகங்களுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறியது ஏற்புடையது அல்ல. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்வதை அரசு அமல்படுத்தினால், அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
மத்திய அரசு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் தொழிலாளர்களுக்கு நேரடியாக அரசாங்கம் நிதி உதவியை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கேட்டுக் கொண்டுள்ளோம். அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் அறிவிப்புகள் வருகிறது. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் மிகப்பெரிய அளவில் நுகர்வோர் பாதிக்கப்படுவர். புதுவையில் அரசு ரூபாய் 1,250 கோடி மின்சாரத்தை வெளிமாநிலத்தில் இருந்து வாங்குகின்றனர். நுகர்வோருக்கு மின்சாரத்தை அதே விலைக்கு விற்பனை செய்கின்றனர். மத்திய அரசின் கீழ் இயங்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மின் கட்டணம் முடிவு செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை. தனியார் மயமாக்கப்பட்டால் இஷ்டத்துக்கு விலை ஏற்றம் ஏற்படும்.
எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் முடிவு என்ன என்பதை இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.