கனிமச் சுரங்கம் - பசுமைச்சூழல்
கனிமச் சுரங்கம் தோண்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் சுற்றுச்சூழல் தொடர்பான முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கணிமச் சுரங்கங்களில் தேவையான அளவுக்கு கனிமங்களைத் தோண்டி எடுத்தபின் மற்றொரு இடத்துக்கு நகர்வது வழக்கம்.
அவ்வாறு அடுத்த இடத்திற்கு நகரும் முன்னர் பசுமைச்சூழலை உருவாக்க தோண்டப்பட்ட இடத்தில் செடிகள், மரங்கள் ஆகியவற்றை நட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சிறப்பான இந்த உத்தரவின்படி சுற்றுச்சூழல் சிக்கலின்றி சரியானவிதத்தில் அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
எதை உணர்த்துகிறது தீர்ப்பு?
பண்டைய காலத்திலிருந்தே கனிமச்சுரங்கங்கள் செயல்பட்டுவருகின்றன. சுமார் 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் கணிமச் சுரங்கங்கள் இருந்ததற்கான தரவுகள் தற்போது கிடைக்கின்றன. இயற்கையோடு ஒத்த வாழ்வை கடைப்பிடித்த அன்றைய பழங்குடிகள், வளர்ச்சிக்காகக் கனிமவளங்களைப் பயன்படுத்தினாலும் அதை ஒரு சரியான விகிதத்திலேயே மேற்கொண்டனர்.
நமது முன்னோர்களுடன் ஒப்பிடுகையில், தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் கனரக உபகரணங்கள் குன்றுகளையும் மலைகளையும் அப்படியே விழுங்கும் அளவுக்கு உருவெடுத்துள்ளன. தொழில்நுட்ப ரீதியில் நாம் முன்னேற்றத்தை அடைந்தாலும், உயிர்நேய அடிப்படையில் நாம் தோல்வி அடைந்துள்ளோம் என்பதை உணர்த்தும் விதத்திலேயே உச்ச நீதிமன்றம் இத்தகைய உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் பாக்சைட் முதல் நிலக்கரி வரை பல்வேறு ரகத்திலான கனிமங்கள் பொதிந்துள்ளன. அவற்றைத் தோண்டியெடுக்க பலவிதமான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதே பசுமைவளம் சாத்தியமா?
இந்த வழிமுறைகள் பயன்படுத்தப்படும்போது, பெரும்பாலும் தாவரங்களுக்குத் தேவையான 'வளமிக்க மண்' அப்பகுதியில் நீக்கப்பட்டு, தாவர வளர்ச்சியானது பாதிக்கப்படுகிறது. அதன்படி ஒரு பகுதியில் கொத்தாக மண்ணைத் தோண்டியெடுத்து, வேறு இடத்தில் கொட்டப்படும்போது அங்குள்ள தாவர உயிர் சூழல் பாதிப்பிற்குள்ளாகிறது.
எனவே கனிம பணிகள் நிறைவடைந்தபின் புனரமைப்புப் பணியாக அங்கு மண்ணிலிருந்து நீக்கப்பட்ட வளங்கள் மீண்டும் அதேபோன்று வளமிக்கதாக மாற்றப்பட வேண்டும். இதில் மற்றொரு சிக்கல் என்னவென்றால், கனிமங்கள் தோண்டியெடுக்கப்படும்போது, அதன் வேதியியல் தன்மை மண்ணுடன் கலந்து நச்சுத்தன்மையை அடைகின்றன. அங்குள்ள நுண்ணுயிர்கள் பாதிப்பிற்குள்ளாகி அழியும் சூழல் உருவாகின்றன. அத்துடன் அப்பகுதியில் உள்ள மண், நீர் ஆகியவற்றின் உப்புத்தன்மை அதிகரிப்பது, பசுமைச் சூழலை பெரிதும் பாதிக்கிறது.
நிலம் இயல்புத்தன்மையை பெறுவதற்கான யோசனை
இதுபோன்ற சிக்கல்களை நடைமுறையில் எதிர்கொள்ள புதுவிதமான திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். இதற்காக நிபுணர் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமனம் செய்வது நல்லது. தொழில்துறையினருடன் விஞ்ஞானிகள், உயிரியலாளர்கள் இணைந்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகப் பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சுற்றுச்சூழல், உயிரியல் தன்மை குறித்து விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும். இந்த மேற்பார்வைக்குழுவில் உள்ளூர்வாசிகள் அவசியம் பங்கேற்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படும்பட்சத்தில் நிலம் தனது இயல்புத்தன்மையை நிச்சயம் திரும்பப்பெறும்.
அதேபோல் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றும்போது அந்தப் பகுதியைச் சாராத தாவர வகைகள் சேர்க்கப்படக் கூடாது என தெரிவிக்கப்படுள்ளது. இந்தப் பசுமை சீரமைப்புப் பணியில் ஈடுபடும் கனிம நிறுவனங்கள் அந்தந்த பகுதியைச் சார்ந்த தவரங்களின் தன்மையை அறிந்து அவற்றை 50 விழுக்காடு நட்டு வளர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'காடுக்கொடு காடு'
மேற்கூறப்பட்ட மாதிரியில் பூர்வீக உயிரினங்களின் மரங்களை வளர்ப்பதற்கு கூடுதலாக 10 விழுக்காடு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். பரந்த நிலங்களில் இலை தழைகள் தொடங்கி பெரும் மரங்கள்வரை அனைத்துவகையான தாவரங்களையும் நடவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் மண் தான் இழந்த கரிமப்பொருள்களைத் திரும்பப்பெறும். சுரங்க நிறுவனங்கள் பண்டைய ஹம்முராபி குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு, கனிமங்கள் தோண்டப்பட்ட உள்ளூர் பகுதிகளுக்கு 'காடுக்கொடு காடு' என்ற அடிப்படையில் அப்பகுதியினர் இழந்த காட்டுக்கு மற்றொரு காட்டை உருவாக்கித் தர வேண்டும்.
இந்த இலக்குகளை அடைய பல்வேறு வகையான வன மறுசீரமைப்பு முறைகளிலிருந்து தங்கள் பகுதிக்கு ஏற்ற ஒன்றை தேர்வுசெய்யலாம். அமைக்கப்படும் தோட்டங்கள் வேளாண்-சுற்றுச்சூழல் முறையில் உருவாக்கப்பட வேண்டும், எனவே நிலத்தில் எந்த நச்சுகளும் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
வனத்தின் மூலத்தளம்
தோட்டங்களில் விலங்குகள், பறவைகளின் தேவைகள் குறித்து விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும். எனவே இந்தப் பகுதியை அனைத்து உயிரினங்களுக்கும் அடைக்கலமாக மாற்றவும், உள்ளூர் பகுதிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்கவும் உணவு, மருத்துவ மரங்கள் விரிவாக பயன்படுத்தப்பட வேண்டும். முதல்கட்டத்தில் கலப்பு புற்கள், பருப்பு வகைகள் பயிரிடுவது இந்த வனத்தின் மூலத்தளத்தை உருவாக்க சிறந்த பலனைத் தரும்.
உத்தரவின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் இந்தத் திட்டத்துடன் 'ஒரு பல்லுயிர் மேலாளர் அல்லது பாதுகாவலர்' ஒருவரை இணைக்க வேண்டும். நிறுவனங்கள் இலக்குகளை அடையத் தவறும்பட்சத்தில் அபராதம், தண்டணை கண்டிப்பாக விதிக்க வேண்டும். தங்களது பொறுப்பை உணரும் நிறுவனங்களின் ஆர்வத்தை மனதில் வைத்து, அவர்களின் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மறு பசுமையாக்குதலுக்கு ஓரளவு நிதி பங்களிப்பாக வழங்க வேண்டும்.
பொறுமையை சோதிக்க வேண்டாம்
நிலத்தின் சீரழிவு என்பது பொது பிரச்னை என்பதைத் தாண்டி அந்தப் பகுதிகளைச் சுற்றி வாழும் சமூகங்களுக்கும் அடிப்படை பிரச்னையாகும். அவர்கள் வாழ்விடம், வாழ்வாதாரத்தை இழப்பதால் அவதிப்படுகிறார்கள்.
இந்நிலையில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகவும் முற்போக்கானது, ஏனெனில் இது அவர்களின் (கனிமவளங்கள் தோண்டப்பட்ட பகுதி மக்கள்) சூழலை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முதல்படியாகவும், மீண்டும் காடுகளில் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள வழிவகைசெய்யவும் முடியும். இந்தப் பகுதிகள் மீட்டமைக்கப்பட்டவுடன் மக்களுக்கு காடுகள் மீதான நம்பிக்கை பிறக்கும்.
விலங்குகள், மரங்கள், நம் தாய் பூமி ஆகியவற்றின் மீது நமக்கு பொறுப்பு உள்ளது. சுரண்டலின் மனநிலையை நாம் விட்டுவிட்டு, பூமிக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த குறைந்தபட்சம் ஆர்வத்தையாவது முதலில் மனதில் கொள்ள வேண்டும். மனிதர்கள் பூமியின் வளங்களை தொடர்ச்சியாகச் சுரண்டிவந்தாலும், அவள் (பூமி) ஒரு மகத்தான தாயைப் போல நம்மை பொறுத்து அனுமதித்தாள். ஆனால் அவளுடைய பொறுமையை நாம் சோதிக்க வேண்டாம்.