மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிம், சர்வதேச அளவில் மிகப்பெரிய நிழல் உலக தாதா ஆவார். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது சகோதரர் அனிஷ் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளியான அல்தாஃப் அப்துல் லத்தீஃப் சயீத், ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு சயீத், தெற்கு மும்பையில் ஒரு விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து விடுதியின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் காவல் துறையினர் சயீத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அவர் அவ்வபோது இந்தியா வருவதும் போவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் துபாயிலிருந்த அவர், கேரள மாநிலம் கண்ணூருக்கு நேற்று வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கண்ணூர் விமான நிலையத்தில் மும்பை காவல் துறையினர் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சயீத்தை கைது செய்த காவல் துறையினர், உடனடியாக அவரை மும்பைக்கு அழைத்துச்சென்றனர். அதைத் தொடர்ந்து மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் சயீத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.