கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து முக்கிய வழக்குகளை மட்டும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கடந்த திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட சுற்றறிக்கையில், கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதன் காரணமாக வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீதிமன்றம் வர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ‘வித்யோ’ என்ற செயலி வாயிலாக காணொலி முறையில் வழக்கறிஞர்கள் வாதாட வேண்டும் என்றும், இந்த வீடியோ பதிவைப் பகிரக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரிக்கவுள்ள வழக்குகள் குறித்த விவரங்கள் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் கூறியது.
இந்நிலையில், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்த தகவலை உச்ச நீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி 59,670 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், ஆனால் ஒரு மாத காலத்திற்குள் அந்த எண்ணிக்கை 60,469 ஆக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் 402 வழக்குகளும், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் 13 வழக்குகளும், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் 136 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவாது தொடர்பான வழக்கு ஒன்பதாவது அமர்வு முன் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு சிறிது கால இடைவேளைக்குப் பின் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கரோனா வைரஸ் காரணமாக வீடியோ கான்பிரன்சிங் மூலம் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
புதிதாக மட்டும் 40,723 வழக்குகள் உள்ளன. இதில் 19,746 வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டியவையாகும். மொத்தமுள்ள 60,469 வழக்குகளில் 12,071 வழக்குகள் நீதிமன்றத்தின் முன் பட்டியலிட முடியாத முழுமையற்ற வழக்குகள் ஆகும்.
இதையும் படிங்க: காலில் விழுந்து கேட்கிறோம்ய.! வீட்டைவிட்டு வெளியே வராதீங்க.! விழுதுகள் இளைஞர்களின் விழிப்புணர்வு