ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள உமைத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு குழந்தைகளுக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தைகளுக்கான மாற்று மருந்தையும் ஊசி மூலம் கொடுத்துள்ளனர். ஆனால், அந்த ஊசியானது மூளை நரம்புகளின் வீக்கத்தைக் குறைக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மருத்துவமனையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரங்களையும் மருந்துத் துறையின் குழு சேகரித்தது. இது தவிர, மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் வார்டுகளிலும் முறைகேடான செயல்கள் நடைபெற்று வருவதையும் கண்டறிந்து, அங்கிருந்த சில ஊசி மருந்துகளையும் மருந்துத்துறை குழு பறிமுதல் செய்துள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க அந்த அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, இது குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் மருத்துவமனையின் செவிலியர் பொறுப்பாளரையும் இடைநீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு புதிய அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ரஞ்சனா தேசாய் கூறுகையில், 'நாங்கள் விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம். இதன் பிறகு ஏதேனும் அலட்சியம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தற்போது நன்றாக இருக்கிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் எந்தவொரு மருந்து அல்லது ஊசியையும் நோயாளிகளுக்கு கொடுப்பதற்கு முன் அதன் காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டியது செவிலியரின் பொறுப்பாகும். ஆனால், அவர்கள் தரப்பில் உள்ள அலட்சியம் அரசு மருத்துவமனையின் நம்பகத்தன்மைக்கு ஒரு கேள்விக்குறியை வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.