2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக்கூறி முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகக்கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து, கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்துவரும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, நவம்பர் மாதம் ஓய்வு பெற இருப்பதால், மேல்முறையீட்டு மனுக்களை முன்கூட்டியே விரைந்து முடிக்க வேண்டும் என சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 2 ஜி மேல்முறையீட்டு மனுக்கள் அவசர வழக்காக, அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் விசாரிக்கப்படும் என உறுதியளித்தது.
இந்நிலையில், 2ஜி வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி நாள்தோறும் விசாரிக்கப்பட இருக்கிறது. முதலில் சிபிஐ மேல்முறையீடு வழக்கில் விசாரணை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 2ஜி வழக்கு; ஆ.ராசாவுக்கு நோட்டீஸ்!