கேரளா - கர்நாடகா எல்லையோரம் அமைந்திருப்பது கசரகோடு பகுதி. இங்கிருந்து கர்நாடகாவின் மங்களூரு மாவட்டம் மிக அருகே இருப்பதால், இந்தப் பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக, மங்களூரையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கசரகோடு பகுதியைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவரும், 60 வயது பெண் ஒருவரும் தனித் தனி ஆம்புலன்ஸ் மூலம் வெவ்வேறு நேரத்தில் மங்களூரு மருத்துவமனைக்குச் செல்வதற்காகப் புறப்பட்டுள்ளனர்.
ஆனால், இவர்களைக் கர்நாடக காவல் துறையினர் அனுமதிக்க மறுத்ததால் இருவரின் உயிர்களும் ஆம்புலன்ஸிலேயே பிரிந்துள்ளது.
இதுகுறித்து பேசிய கசரகோடு எம்.பி ராஜ்மோகன் உன்னிதன், அவசர மருத்துவ சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களை அனுமதிக்காவிட்டால், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கொண்டு செல்வோம் என்று எச்சரித்துள்ளார்.