பெங்களூரு: கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி., நாகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் பகவத் கீதை மற்றும் மகாபாரதம் நல்லொழுக்க கல்வியாக போதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “எந்த மத்திற்கும் எதிராக இது இல்லை. ஒரு பள்ளியில் 90 சதவீத குழந்தைகள் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, அவர்களுக்கு தேவையான பாடம் அதிகமாக இருக்கும், அது தவிர்க்க முடியாதது.
அதேபோல் திப்பு சுல்தானின் பாடப்பகுதியும் நீக்கப்படவில்லை. மதராசாக்களில் மாநில கல்வித் திட்டத்தை அமல்படுத்தக் கோரி இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை. எனினும் மதராசாக்களில் போதிக்கப்படும் கல்வியால் இன்றைய போட்டி உலகில் பயனிக்க முடியாது என்று அவர்களின் பெற்றோர் கருதுகின்றனர்.
மேலும் போட்டித் தேர்வு கடினமாகிவருகிறது. ஆகையால், மற்ற குழந்தைகள் போல் அவர்கள் கல்வி கற்க வேண்டும்” என்றார். முன்னதாக பாஜக எம்எல்ஏ அப்பாசு ரஞ்சன், கர்நாடகாவில் திப்பு சுல்தான் பாடத்திட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது அவர், “திப்பு சுல்தான் கன்னட விரோதி. அவர் கன்னட மொழியை பாரசீக மொழியுடன் மாற்ற முயற்சித்தார். குடகு பகுதியில் அவர் செய்த அட்டூழியங்கள் ஏராளம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பி.சி. நாகேஷ், “திப்பு சுல்தானின் வரலாற்றை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும் எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் தேவையற்ற கூற்றுகள் நீக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : ஜஹாங்கீர்புரி வன்முறை; முக்கிய குற்றவாளி பாஜக பிரமுகர்!