மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் "பதான்". நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அடுத்த மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பதான் படத்திலிருந்து 'பேஷரம் ரங்' என்ற பாடல் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பாடலில் நடிகை தீபிகா படுகோன் பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.
இந்த நடனம் மிகவும் ஆபாசமாக இருக்கிறது எனவும், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி அணிந்திருப்பது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இந்து மத அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதேபோல் தீபிகா காவி நிறத்திலும், ஷாருக்கான் பச்சை நிறத்திலும் உடை அணிந்திருப்பது, இரண்டு மதங்களை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இந்தப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென இந்து மத அமைப்பினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பதான் படத்தில் 'பேஷரம் ரங்' பாடல் உள்பட பல்வேறு காட்சிகளில் திருத்தங்கள் செய்யும்படி சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை செய்து திருத்தப்பட்ட பதிப்பைச் சமர்ப்பிக்கும்படி படத் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பதான்' பாடலில் தீபிகாவின் உடை சர்ச்சை; 'படம் வெளியாகாது' ம.பி. மந்திரி வார்னிங்