சித்ரதுர்கா (கர்நாடகா): ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சி.இ.ஓ, தனது இறந்த மகனின் உடலை, பையில் வைத்து கார் மூலம் கோவாவில் இருந்து கர்நாடாகாவிற்கு எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்டு உள்ளார்.
linkedln தரவுப்படி கர்நாடகா மாநிலத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத் (வயது 39) என்பவர், தனது 4 வயது மகனுடன், கடந்த ஜனவரி 6 ஆம் தேதி, வடக்கு கோவாவில் உள்ள கண்டோலிமில் உள்ள தனியார் ஹோட்டலில், இரண்டு நாட்கள் தங்கி விட்டு, ஜன.8 ஆம் தேதி அங்கிருந்து செக் அவுட் செய்துள்ளார். இதனை அடுத்து அவர் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்ய சென்ற பணியாளர், அங்கு இரத்தக் கறைகள் இருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்து, இது குறித்து நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ஹோட்டல் நிர்வாகம் கோவாவில் உள்ள கலங்குட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் சுசனா சேத் ஹோட்டலில் செக் இன் செய்யும் போது தனது மகனுடன் வந்ததும், செக் அவுட் செய்யும் போது, தனது மகன் இல்லாமல் தனியாக, ஒரு பையை எடுத்துச் சென்றதும் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து போலீசார், ஹோட்டல் வரவேற்பாளர்களிடம் நடத்திய விசாரணையில், சுசனா சேத் பெங்களூருக்கு விமானத்தில் பயணிக்க மறுப்பு தெரிவித்து, காரில் செல்வதற்கு விரும்புவதாக தெரிவித்து உள்ளார் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சுசனா சேத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவரது மகன் குறித்து கேள்வியெழுப்பிய நிலையில், அவர் தனது நண்பரது வீட்டில் தனது மகனை விட்டு சென்றுள்ளதாக கூறி, நண்பரது முகவரியையும் கூறியுள்ளார்.
அவர் தெரிவித்த முகவரியை, போலீசார் சரிபார்த்த போது, அது போலியான முகவரி என்பது தெரிய வந்துள்ளது. இதனால் சுதாரித்த போலீசார், சுசனா சேத் பயணித்த கார் ஓட்டுநரை தொடர்பு கொண்டு பேசியதில், சுசனா சேத்துடன் அவரது மகன் இல்லை என்பது நிரூபணமானது. அதன் பின் போலீசார், கார் ஓட்டுநரிடம், ஜமங்கலா காவல் நிலையத்திற்கு சுசனா சேத்துடன் உடனடியாக வரும்படியாக அறிவுறுத்தி உள்ளனர்.
அதன் படி காவல் நிலையத்திற்கு வந்த சுசனா சேத்தின் சூட்கேஸ்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில் சுசனா சேத்தின் மகன் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஹோட்டல் அறையில் என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து சுசனா சேத் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சி.இ.ஓ, தனது மகனின் சடலத்தை பையில் வைத்து, கார் மூலம் கோவாவில் இருந்து கர்நாடாகாவிற்கு எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பகலில் பேக்கரி வேலை, இரவில் பைக் திருட்டு: புதுச்சேரியில் கைவரிசை காட்டிய 3 பேர் கைது!