நல்கொண்டா: தெலங்கானா மாநிலம் முனுகோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜ்கோபால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து முனுகோடு தொகுதிக்கு நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் பாஜக சார்பில் ராஜ்கோபால் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இடைத்தேர்தல் நெருங்கி வருவதால், வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு விருந்து, மது விருந்து உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவையும் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினரும் களம் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை, முனுகோடு தொகுதியில் 160.8 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கலால் துறை தகவல் தெரிவித்துள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் 230 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நல்கொண்டா மாவட்டத்தில் சராசரியாக மாதத்திற்கு 132 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்துள்ளதாகவும், தற்போது இந்த ஒரு தொகுதியில் மட்டும் அதை விட இரட்டிப்பு விற்பனை நடக்கும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத், இப்ராஹிம்பட்டினம், தேவரகொண்டா ஆகிய பகுதிகளிலிருந்தும் முனுகோடு தொகுதிக்கு மதுபாட்டில்கள் வாங்கி வந்து விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம், வாக்காளர்களுக்கு 500 ரூபாய் விநியோகம் செய்யப்படுவதால், சில்லறை நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தேர்தலுக்காகப் பிற பகுதிகளிலிருந்து இளைஞர்கள் அழைத்து வரப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் இருந்து ஹைதராபாத் வரும் ரயில்களில் தினமும் 200 இளைஞர்கள் வருவதாகவும், அவர்களுக்கு 500 ரூபாய் பணம் மற்றும் இரண்டு வேளை உணவு வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.
அனைத்து கிராமங்களிலும் அரசியல் கட்சியினர் அசைவ உணவை இடைவிடாமல் விநியோகித்து வருவதாகவும், உணவுக்காக மட்டும் 50 கோடி ரூபாய் வரை அரசியல் கட்சியினர் செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது. தொகுதி முழுவதும் இறைச்சிக் கடைகளில் சுமார் ஐந்து மடங்கு வியாபாரம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.