கோழிக்கோடு: கேரள மாநிலம், கோழிக்கோடு கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டாயிரத்து 537 பேர் குவிந்தனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. என்னவென்றால், அனைவரது பெயரும் அஷ்ரஃப் என்பதாகும்.
அதுமட்டுமின்றி ஒரே பெயரை கொண்ட அதிகம் பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, URF உலக சாதனையிலும் இடம்பிடித்துள்ளது. அஷ்ரஃப் என்ற பெயர் கொண்ட இரண்டாயிரத்து 537 பேரும், ஆங்கிலத்தில் அஷ்ரஃப் என்ற பெயருக்கான எழுத்துகளின் வடிவில் நின்று உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
முன்னதாக போஸ்னியாவில் குப்ரோஸ்கி என்ற பெயரை கொண்ட இரண்டாயிரத்து 325 பேர் பங்கேற்ற நிகழ்ச்சி முந்தைய உலக சாதனையாக இருந்தது.
தற்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 14 மாவட்டங்களைச் சேர்ந்த, அஷ்ரஃப் என்ற பெயர் கொண்ட, இரண்டாயிரத்து 537 பேர் திரண்டு புதிய சாதனைக்கு சொந்தக்காரர்கள் ஆகியுள்ளனர். போதைப்பழக்கம் இல்லாத கேரளா என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, துறைமுகம் மற்றும் அருங்காட்சியகம் துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் தொடங்கி வைத்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு மலப்புரம் மாவட்டம், திருராங்கடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அஷ்ரஃப் என்ற பெயர் கொண்ட 4 பேர் சந்தித்துக் கொண்டனர். நால்வரும் தேநீர் கடைக்குச் சென்ற போது, தேநீர் கடை உரிமையாளர் பெயரும் அஷ்ரஃப் என்பது தெரியவந்தது. இதுவே இப்பெயர் கொண்ட அனைவரும் குழுவாக இணைய காரணமாக அமைந்தது.