தேஷ்பூர்: அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் வெஸ்ட் காமெங் மாவட்டம் மாண்டலா அடுத்து உள்ள டிராங் பகுதியில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா என்ற ஹெலிகாப்டர் நேற்று (மார்ச் 16) விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பைலட், மூத்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது குழுவினர் இருந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தில் சோதனையில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் இருவரின் சடலத்தை கைப்பற்றினர். கண்டெடுக்கப்பட்ட இருவரும், லெப்டினண்ட் கர்னல் வினய் பானு ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த், தமிழகத்தின் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
நேற்று (மார்ச்.16) காலை 9.15 மணி அளவில் மண்டாலா பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டு இருந்த நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Swapnalok Fire accident: ஹைதரபாத்தில் பயங்கர தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு!
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவக் குழுவினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் லெப்டினண்ட் கர்னல் வினய் பானு ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோரின் சடலத்தை கண்டெடுத்து உள்ளார். இருவரது உடலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் சடலங்கள் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. மேஜர் ஜெயந்தின் உடல் இன்று (மார்ச்.17) இரவுக்குள் அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த சம்பவம் அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஜெயமங்கலத்திற்கு வாகனம் மூலம் மேஜர் ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அருணாச்சலப்பிரதேச ஹெலிகாப்டர் விபத்து - 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு!