தமிழ்நாட்டில் கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு அரசின் தடைகளையும், மத்திய அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி, சென்ற ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தினர். இந்த யாத்திரை அவர்கள் திட்டமிட்டபடி, திருத்தணியில் தொடங்கி முருகனின் அறுபடை வீடுகள் வழியாக திருச்செந்தூரில் முடிவடைந்தது.
இதன் மூலம், தமிழ்க் கடவுள் முருகனை பாதுகாப்பதாக, பாஜக, மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் பங்குனி உத்திரத் திருவிழா, இந்த ஆண்டு அரசியல் கட்சிகளின் விழாவாக மாறியுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, தமிழ்நாட்டில் முருக பக்தர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பங்குனி உத்தரத் திருவிழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்!
இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்தப் புனித நாளில் எனது அன்பான ’பங்குனி உத்திரம்’ திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல்! வீர வேல்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பங்குனி உத்திரத்திற்கு தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னெடுத்த இந்த வேல் யாத்திரை நிகழ்வு, தமிழ்நாட்டில் அவர்களுக்கான தடம் பதிக்கும் முயற்சியில் ஒன்று எனப் பலரும் முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த யாத்திரையின் தாக்கத்தால் திமுக உள்பட பல்வேறு கட்சியினர் தற்போது கையில் வேலினை ஏந்திக்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.