புதுச்சேரி: அம்பேத்கர் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு ஆளுநர் தமிழிசை, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் அரசு சார்பில் சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.