டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கோரும் எனத் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சிகள் தங்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பிற்பகலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நிலைத் தலைவர்களின் கூட்டமும் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கி இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது.
குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட் ஆனது, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் ஆகும். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறும்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு அவைகளிலும் விவாதம் நடைபெறும். இது பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுடன் முடிவடையும். பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றக் குழுக்களுக்கான விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடும்.
இதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியானது மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும். மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்படும். கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2023 மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு என்ன இருக்கிறது!