புவனேஷ்வர்: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று(அக்.20) உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 22ஆம் தேதி மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், அது மேலும் வலுவடைந்து வரும் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 24ஆம் தேதிக்குள் வடக்குத் திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் படிப்படியாக வலுவிழந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வரும் 25ஆம் தேதி மேற்குவங்கம் - பங்களாதேஷ் இடையே ஒடிசா கடற்பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு "சிட்ராங்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா மாநில அரசு அதன் 7 கடலோர மாவட்டங்களை உஷார் படுத்தியுள்ளது. கஞ்சம், பூரி, குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபாடா, பத்ரக், பாலசோர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும், இந்த மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.