அன்பு, பாசம்,கருணை,பொறுமை என அனைத்திற்கும் நாம் ஒரு முகம் வைத்திருப்போம். அந்த முகம் எப்போதும் புன்னைகையுடன், மென்மையான குரலுடன், கடிந்துக் கொள்ளாத பார்வையுடன் நம்மை கட்டி தழுவுவது போல் இருக்க எண்ணுவோம். ஆனால், அது உண்மையல்ல. சில உறவுகளின் பாசம், 'இன்னுமா நீ தூங்குற', 'சாப்பிடாம வெளிய போன அவ்ளோ தா', 'அந்த ஃபோன எப்ப வைக்கிறன்னு நானும்தா பாக்குறனே' என்ற வார்த்தைகளை அன்பு கலந்த கோபத்துடன் வெளிப்படுத்தும் ஜீவன் தான் அம்மா..!
சிலருக்கு அப்பா என்றால் பிடிக்கும், சிலருக்கு அம்மா என்றால் பிடிக்கும். ஆனால், பத்து குழந்தை இருந்தாலும், இதுதான் எனக்கு பிடித்த குழந்தை என ஒருநாளும் அவள்(அம்மா) கூறுவதில்லை. விளம்பரங்களில் அலங்கரித்து கொண்டு, உதடு முழுவதும் புன்னகையுடன் குழந்தைகளின் தலைக் கோதும் பெற்றோருக்கு தெரியாது, அடுப்படியில் விலகி நிற்கும் சேலையை இழுத்து விடக் கூட நேரமின்றி, குழந்தையின் பசிக்காக போராடும் தாயின் வியர்வையின் முத்துக்கள் அழகு என்று. ஓய்வு என்றால் நமக்கெல்லாம், நீட்டி நிமிர்ந்து படுப்பது அல்லது வெளியே செல்வது. ஆனால் அவளுக்கு அது, உலை கொதிக்கும் நேரத்திலும், காய்கறி வெட்டும் நேரத்திலும் அரை கவனிப்போடு அவ்வப்போது பார்க்கும் சீரியல் மட்டுமே.
நவீன உலகில் வேலைக்கு செல்லும் சில அம்மாக்கள் தங்களது பிள்ளைகளோடு நேரம் செலவிட முடியாமல் போவதை எண்ணி மனம் வருந்துவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு பலரும் கூறும் ஆறுதல், "பிள்ளைகளை சுமந்ததோடு, குடும்ப பாரத்தையும் சேர்த்து சுமக்கும் உன்னதமானவர்களின் உள்ளம் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்" என்பது தான்.. அதனால் வேலைக்கு செல்லும் அம்மாக்களின் பிரச்சனைகளையும் பிள்ளைகளாகிய நாம் உணர்ந்து செயல்படுவது நல்லது.
நம் அம்மாவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு என்று பெரிதாக எதுவும் இருந்ததில்லை. பூ வாங்கி கொடுத்தால் மனதிற்குள்ளேயே ரகசியமாக சிரித்து, அதை குளித்து விட்டு வைப்பது. பல வருடம் கழித்து தனக்கென எடுத்த ஒரு ஆடையை யாருக்கு காட்டுவது என சிந்திப்பது, சமையல் அரையில் உப்பு, புளி, கடுகு டப்பாக்களுடன் பேசுவது என தனக்கான ஒரு புது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பாள். மொழி என்பது ஒருவருடைய கருத்தை மற்றவருக்கு பகிர்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால், தாயிடம் அதற்கான எந்த தேவையும் இருந்ததில்லை. முகத்தை பார்த்தே நம் தேவையை அறிந்துக்கொள்ளும் கடவுள்.
தாயின் தியாகம், தைரியம், கருணை என அனைத்தையும் நினைவு கூறும் தளபதி, ராம், அம்மா கணக்கு, பிச்சைக்காரன், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட சினிமாக்கள் இன்னும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. இன்று(மே 14) அன்னையர் தினம், தாயை கொண்டாட நமக்கு தனியாக நாள் எதுவும் தேவையில்லை. இந்த நாள் அனைத்து அம்மாக்களின் தியாகத்திற்கும் நன்றி செலுத்தும் நாள். தாயோடு நாம் இருப்பதும், அவரை நாம் மதிப்பதும் தான் உண்மையான அன்னையர் தினம்.
இதையும் படிங்க: Villupuram Toxic Liquor: விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்!