வதோதரா: நாடு முழுவதும் இன்று (மார்ச் 30) ஸ்ரீராம நவமியையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள ஃபதேபுராவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் திடீரென சிலர் பேரணியில் சென்ற பக்தர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் சாலையோர கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து காவல் துணை ஆணையர் யஷ்பால் ஜகனியா கூறுகையில், "மசூதி அருகே பேரணி சென்ற போது பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். இது வகுப்புவாத மோதல் இல்லை. கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு பேரணி தொடர்ந்து நடைபெற்றது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். எனினும், கல்வீச்சு சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளதாக பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவர் கேட்டன் திரிவேதி குற்றம்சாட்டினார். போதிய போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், கும்பர்வாடா பகுதியிலும் ஸ்ரீராம நவமி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ மணீஷா வகில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பேரணியில் பங்கேற்றவர்கள் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பெண்கள் உட்பட சிலர் காயம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அலங்கரிக்கப்பட்ட ராமர் ரதம், பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோயில் கிணற்றில் விழுந்து 11 பேர் பலி: ஸ்ரீராம நவமியன்று சோகம் - பிரதமர் இரங்கல்