நாடு முழுவதும் கோவிட் மூன்றாம் அலை தீவிரமடைந்துவரும் நிலையில், 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
ஏற்கனவே, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. தடுப்பூசி குறித்த அச்சம் சிலரிடம் நிலவிவரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் 98 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வத்துடன் வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த கோபுரி வத்சலா என்ற பாட்டி, அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த ஆர்வத்துடன் இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். பாட்டியின் இந்த ஆர்வத்தைக் கண்ட சுகாதாரத்துறை அலுவலர், பாட்டியின் இந்த பொறுப்புணர்வு மற்றும் சமூக அக்கறை பலருக்கும் நம்பிக்கை தரும் என்றார்.
தெலங்கானாவில் இதுவரை ஐந்து கோடியே 23 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 100 விழுக்காடு இலக்கை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: HOROSCOPE: ஜனவரி 24 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?