உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள ஶ்ரீநகர் பகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு, அருண் ராஜ் சலையா என்பவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து ஜெயந்தி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து மலிவு விலைக்கு மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கித் தருவதாகக்கூறி, அப்பகுதி மக்களிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் வியாபாரிகளிடமும் பணம் வாங்கியுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பர்னிச்சர்களை வாங்கித் தருவதாகக்கூறி சுமார் 3 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிகிறது. பிறகு பொருட்களை வாங்கித் தராமல் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஶ்ரீநகரைச் சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் தங்கள் பணத்தை மீட்டுத்தரும்படி போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடந்து வந்தது. அருண்ராஜ் பற்றி தகவல் தெரிவித்தால் ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பவுரி மாவட்ட காவல்துறை அறிவித்தது.
இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட அருண்ராஜ் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அருண்ராஜை தஞ்சையில் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ருத்ரபிரயாக், ரிஷிகேஷ், உத்தரகண்ட் ஆகிய இடங்களிலும் இதேபோல் மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' நூதன முறையில் இளம்பெண் ஏமாற்றம்.. பஞ்சாப் இளைஞர்கள் கைது!