மகாராஷ்டிரா (நாந்தேட்): மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பிறந்த குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு சூழல் நிலவி வருவதாகவும், இதன் காரணமாகவே நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் கிடைக்காமல் அவர்கள் உயிரிழக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.ஆர்.வாகோடு கூறியபோது, "நாந்தேட் பகுதியில் 70 முதல் 80 கி.மீ. பரப்பளவில் இவ்வளவு பெரிய மருத்துவமனை இல்லை. அதனால்தான் நோயாளிகள் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில், தற்போது இங்கு 12 பிறந்த குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
பணியாளர்கள் இடமாற்றம் காரணமாக தற்சமயம் மருத்துவமனையில் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. மேலும், பிற மாவட்டங்கள் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இதனால், ஊழியர்களின் சேவையில் மன அழுத்தம் அதிகரிக்கிறது. இது மட்டுமல்லாது இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். அதனால், மருந்துகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளின் சிகிச்சை தடைபடுகிறது. இதன் காரணமாகவே, கடந்த 24 மணி நேரத்தில் 6 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் என 12 குழந்தைகள் உட்பட பாம்புக்கடி மற்றும் பல நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகள் என 24 பேர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டும் அல்லாது, இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கையும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு: விவரங்களை வெளியிட்ட பீகார் அரசு!