அவந்திபோரா: காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அச்சன் கிராமத்தில், கடந்த 26ஆம் தேதி சஞ்சய் சர்மா(40) என்ற காஷ்மீர் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தைக்கு சென்று கொண்டிருந்தபோது பொதுவெளியில் சுடப்பட்டார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காஷ்மீர் பண்டிட் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புல்வாமா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், பத்கம்போரா பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, போலீசாரும், வீரர்களும் அப்பகுதியைச் சுற்றிவளைத்தனர். அப்போது பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர், அகிப் முஸ்தபா பட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா கொலையில் தொடர்புடையவர் என காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.