மேஷ்ஷானா: 5 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 பேருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசாத் ஊர்வலம் தொடர்பாக தற்போதைய குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி உள்பட 12 பேர் மீது ஐபிசி 143 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் கூடுதல் மாஜிஸ்திரேட் தலைமை நீதிபதி ஜேஏ பார்மர், “சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 பேருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதில் தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் ரேஷ்மா பட்டேலும் ஒருவர் ஆவார். பட்டேல் சமூக போராளியான இவர், ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மரணித்துவிட்டார். மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் 10 பேருக்கு 3 மாதம் சிறை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் கைது!