கோலாப்பூர் (மகாராஷ்டிரா): மாதவிடாய் சுகாதார காலத்தில் பெண்களுக்காக மகாராஷ்டிரா அரசு ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கும், சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களுக்கும் 10 சானிட்டரி நாப்கின்களை ஒரு ரூபாய்க்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 60 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.
இந்தத் திட்டம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று தொடங்கப்படும் என மகாராஷ்டிரா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹசன் முஷ்ரிப், “பெண்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மாதவிடாய் மிகவும் முக்கியமான மற்றும் உலகளாவிய பிரச்னையாகும்.
கடந்த ஆண்டு மாதவிடாயின் போது கவனக்குறைவு மற்றும் சுகாதாரமின்மையின் காரணமாக, உலகம் முழுவதும் எட்டு லட்சம் பெண்கள் இறந்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 120 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மாதவிடாய் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் மாதவிடாய் ஏற்படும் 320 மில்லியன் பெண்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். இதில், கர்ப்பப்பை புற்றுநோயால் நாட்டில் நான்கு ஆண்டுகளில் 60,000 க்கும் மேற்பட்ட பெண்கள் இறப்பதில், மூன்றில் இரண்டு பங்கு மாதவிடாய் குறித்த புரிதல் இல்லாததால் ஏற்படுகிறது.
மகாராஷ்டிராவில் 66 சதவீத பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். நகர்ப்புறங்களின் விகிதாச்சாரமும் அதிகம். கிராமப்புறங்களில் 17.30 சதவீத பெண்களுக்கு மட்டுமே சானிட்டரி நாப்கின் கிடைக்கிறது. சானிட்டரி பேட் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, இதுபோன்ற பல பிரச்னைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர்.
தற்போது மகாராஷ்டிராவில், சுகாதாரத் துறையால் செயல்படுத்தப்படும் மாதவிடாய் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 19 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு மட்டும் 1 ரூபாய்க்கு ஆறு நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து பெண்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் பலன் கிடைப்பதில்லை.
இதனால் இப்பிரச்னைக்கு தீர்வு காண, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து வளரிளம் பெண்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை, 1 ரூபாய்க்கு 10 சானிட்டரி நாப்கின்களை வழங்கவுள்ளது. மேலும், இந்த திட்டம் வருகிற ஆகஸ்ட் 15 முதல் தொடங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உத்தரகண்டில் பொது சிவில் சட்டம்; சட்ட வரைவுக்குழு அமைப்பு!