பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் தமிழன் இயற்கை வேளாண் விதைகள் அமைப்பு மற்றும் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் விதைத் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் இயற்கை வேளாண்மை செய்வதற்கு நாட்டு நெல் ரகங்கள், பருத்தி, மக்காச்சோளம், நாட்டு ரக காய்கறி விதைகள், சிறு தானியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
மேலும் பஞ்சகவ்யம், மீன் கரைசல், அமிர்த கரைசல், இயற்கை உரங்கள், பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து முன்னோடி இயற்கை விவசாயிகள் எடுத்துரைத்தனர். இதில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா, அரிசி, அவள் வகைகள், எண்ணெய் வகைகள் மற்றும் சிறுதானியங்களில் செய்யப்பட்ட தின்பண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த திருவிழாவில் முன்னோடி இயற்கை விவசாயிகள் தங்களுடைய இயற்கை விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இயற்கை முறையில் தயார் செய்த உணவுகள் வழங்கப்பட்டன.