நீலகிரி: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி அதன் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரியின் மலை சார்ந்த பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மலை ரயில் செல்லும் தண்டவாள பாதை மீது தண்ணீர் அருவி போல் கொட்டி வருகிறது.
மேலும், பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு மலை ரயிலின் இருப்புப் பாதை மண்ணோடு புதைந்துள்ளது. ஆகையால், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் சேவையானது, கனமழை காரணமாக அதன் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், இன்று (அக்.16) மற்றும் நாளை (அக்.17) ஆகிய இரண்டு நாட்கள் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.