நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், ராட்சத மரங்கள் விழுந்தும் தண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 25 நாட்களாக ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சீரமைக்கும் பணிகள் முடிவடைந்து மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கிச் செல்லும் மலை ரயில் சேவை துவங்கியது. இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.