புதுச்சேரி: புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகேயுள்ளது. இங்கு பொதுப்பணித்துறை சார்பில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நலா குளத்தில் நீர் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக ஏனாமில் கடும் வெயில் அடித்து வந்த நிலையில், இன்று காலை வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது.
இதனால் நலா குளத்தில் திடீரென சீதோஷ்ண நிலை மாறியதால், குளத்தில் ஆக்ஸிஜன் குறைந்து ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. பின்னர் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உள்ளூர் மீனவர்களைக் கொண்டு இறந்த மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டது.