ஹைதராபாத்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஆண்டின் இறுதியில் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தையும், அதனையடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்தது. 2024ஆம் ஆண்டின் முதல் நாளான ஜன.1ஆம் தேதி, விண்வெளியில் கருந்துளை ஆய்வுக்கான எக்ஸ்போசாட் உடன், பி.எஸ்.எல்.வி சி-58 (PSLV-C58) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வானிலை மாறுபாடுகளைக் கண்டறிந்து தகவல்களை வழங்குவதற்காக இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் நாளை (பிப்.17) அனுப்பப்பட உள்ளது.
இந்த இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நாளை (பிப்.17) மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான 27.30 மணி நேர கவுண்டவுன் இன்று மதியம் 2.05 மணிக்கு தொடங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணிகள் இறுதிகட்டத்தை அடைந்தன.
மொத்தம் 2 ஆயிரத்து 275 கிலோ எடையுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை 6 வகையான அலைநீளங்களில் பூமியை புகைப்படம் எடுத்து வழங்கும். இதன் மூலம், வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவைக் கணக்கீடு செய்ய முடியும்.
தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் தானியங்கி தரவு சேகரிப்புத் தளங்களில் இருந்து கடல்சார், வானிலை மற்றும் நீரியல் தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை முன்னறிவிப்புத் திறன்களை மேம்படுத்துவது, டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டரின் நோக்கமாகும். இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. ஜி.எஸ்.எல்.வி எஃப் - 14 விண்கலம் இஸ்ரோவின் 93வது விண்கலமாகும்.
51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் 139 டன் உந்துசக்தி கொண்ட திட உந்துசக்தி மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான கவுண்டவுன் இன்று மதியம் 2.05 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், செயற்கைகோள் மற்றும் ராக்கெட்டின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த ராக்கெட் ஏவுதலை இன்று மதியம் 2 மணி முதல், https://isro.gov.in Facebook, https://facebook.com/ISRO/, https://youtube.com/watch?v=jynmNenneFk என்ற இணையதளத்திலும், டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும் நேரலையில் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கூகுள் பார்ட் ஏஐ ஜெமினி என பெயர் மாற்றம்: மாத சந்தா எவ்வளவு தெரியுமா?