கலிஃபோர்னியா: உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள், தனது புதிய தலைமை நிதி அதிகாரியாக (CFO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவன் பரேக் (Kevan Parekh) என்பவரை நியமித்துள்ளது. தற்போது ஆப்பிளின் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் துணைத் தலைவராக உள்ள கெவன் பரேக், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஆப்பிள் நிர்வாகக் குழுவின் தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்பார் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், "கெவன் பரேக் சுமார் 11 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தின் நிதி தலைமைக் குழுவில் இன்றியமையாத உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், அவரது கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் நிதிநிலைகளில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்கும் திறமை ஆகியவையே கெவன் பரேக்கை ஆப்பிளின் அடுத்த தலைமை நிதி அதிகாரியாக தேர்ந்தெடுக்க வழிவகுத்தது.
இதுமட்டும் அல்லாது, மிக குறுகிய காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் நிதியியல் குழுவில் தன்னை முக்கிய பகுதியாக நிலைநிறுத்திக் கொண்டது மூலம் கெவன் பரேக்கின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடிகிறது." என்று ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக் (Tim Cook) தெரிவித்துள்ளார்.
🚨 Apple announces Indian-origin engineer Kevan Parekh as its new Chief Financial Officer, to assume office on January 1, 2025. pic.twitter.com/BA5USW2WfG
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 27, 2024
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கெவன் பரேக், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ., பட்டம் பெற்ற மின் பொறியாளர் ஆவார். ஆப்பிளில் சேருவதற்கு முன்பு, தாம்சன் ராய்ட்டர்ஸ் கார்ப்பரேஷன் (Thomson Reuters Corporation) மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) ஆகிய நிறுவனங்களில் பல்வேறு மூத்த தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
இதனை அடுத்து, ஆப்பிளில் இவர் சேர்ந்தபோது உலகளாவிய விற்பனை, சில்லறை வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் நிதி ஆகியவற்றை வழிநடத்தினார். அதன் தொடர்ச்சியாக, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு சந்தைப்படுத்தல், இணைய விற்பனை மற்றும் சேவைகள், பொறியியல் குழுக்களின் நிதி உதவி ஆகிய பிரிவுகளுக்கு தலைமை தாங்கினார். தற்போது ஆப்பிளின் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றி வருகின்றார் கெவன் பரேக்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவன் பரேக், ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்த 11 ஆண்டுகளிலேயே தலைமை நிதி அதிகாரி போன்ற உயர் பதவியில் நியமிக்கப்பட்டது மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மெட்டா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்ததா பைடன் ஹாரிஸ் நிர்வாகம்? - மார்க் ஜூக்கர்பெர்க் குற்றச்சாட்டு!