சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய ஹேமச்சந்திரன் என்பவர், உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், அந்த தனியார் மருத்துவமனையில் உடல் குறைவு அறுவை சிகிச்சை செய்தபோது, உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஹேமச்சந்திரன் உயிரிழந்தார்.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லையென்றும், தவறான சிகிச்சையால்தான் தனது மகன் உயிரிழந்து விட்டதாகவும் ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதன் அடிப்படையில், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.
இதனையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, பம்மல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் மருத்துவமனை ஊழியர்கள், அறுவை சிகிச்சையில் பங்கேற்ற நபர்கள், உயிரிழந்த ஹேமச்சந்திரனின் குடும்பத்தினர் என மொத்தம் 22 நபர்களிடம் மருத்துவக் குழு தீவிர விசாரணை நடத்தியது.
சுகாதாரத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில், தனியார் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தணியார் மருத்துவமனை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை, டெக்னீசியன்கள் போதுமான அளவு இல்லை, அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து கையெழுத்து பெறவில்லை, அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை, அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல தவறுகள் மருத்துவமனை மீது உள்ளதால் தற்காலிகமாக மூட வேண்டும், மேலும் உரிய மருத்துவர்கள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, மறு உத்தரவு வரும் வரை உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் யாரையும் மருத்துவமனையில் அனுமதிக்கக்கூடாது எனவும் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பறவைகள் பூங்கா - ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!