தேனி: மதுரை மாவட்டம், பேரையூர் அடுத்த பெருங்காமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேந்திரன் (27). இவர் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியைச் சேர்ந்த மாயி என்பவரது மகள் பவித்ரா (23) என்பவரை, 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மது, கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையான புவனேந்திரன், அவரது மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது தந்தையுடன் தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது பாட்டி அம்மாபிள்ளை என்பவர் வீட்டிற்கு பவித்ரா வந்துள்ளார்.
அதன் பின்னர், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) தனது மனைவி பவித்ராவைக் காண நண்பர் முருகேசன் என்பவருடன் வந்த புவேந்திரன், பவித்ராவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பவித்ராவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார். அதனைத் தடுக்க முயன்ற பவிதராவின் தந்தையையும், கத்தியால் குத்திவிட்டு புவனேந்திரன் தப்பிச் சென்றுள்ளார்.
இதில் பவித்ரா மற்றும் அவரது தந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர், அங்கிருந்த புவேந்திரனின் நண்பர் முருகேசனை அப்பகுதி மக்கள் பிடித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரிடம் முருகேசனை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முருகேசனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, ஆண்டிபட்டி அடுத்த க.விலக்கு பகுதியில் தலைமறைவாக இருந்த புவேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், புவேந்திரனின் மனைவி பவித்ரா வேறொருவருடன் அலைபேசியில் பேசி பழகி உள்ளதும், அதனைத் தவிர்க்குமாறு புவேந்திரன் கண்டித்ததாகவும், இருப்பினும், பவித்ரா தொடர்ந்து பேசியுள்ளதாகவும் புவனேந்திரன் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், தன் மனைவியுடன் பழகிய நபரை தொடர்பு கொண்டு, தன் மனைவியுடன் பேசக்கூடாது என கண்டித்துள்ளார்.
அதற்கு அந்த நபர் தான் பேசவில்லை என்றும், பவித்ராதான் தன்னுடன் பேசி வருவதாக கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த புவேந்திரன் தன்னுடைய மனைவியை கொலை செய்ததாகவும், பவித்ராவின் தந்தை குறுக்கே வந்ததால் அவரையும் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் எதிரே அமர்ந்து மது அருந்தியவரின் மண்டையை உடைத்த நபர் கைது!