சென்னை: நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் மற்றும் ஒன்றிய பொது மேலாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் உடன் இன்றைக்கு ஆலோசனை மேற்கொண்டோம். தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி கணிசமாக உயர்ந்து இருக்கிறது.
ஆவின் பால் கொள்முதல் 34 லட்சம் லிட்டரை தாண்டி 35 லட்ச லிட்டரை எட்டி இருக்கிறது. இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு தருகின்ற விவசாயிகளுக்கு நன்றி. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தரத்திற்கு ஏற்ற விலை திட்டத்தை நிறைவேற்றியதன் காரணமாக வெளிமார்க்கெட்டில் தனியார் பால் கொள்முதல் செய்வதை விட விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் முதல் ஒன்றரை ரூபாய் வரை அதிகம் கொடுத்தும் அதே போல கூட்டுறவு துறைகள் மூலம் கொள்முதல் செய்யும் நிலை உருவாகி இருக்கிறது.
கொள்முதலில் முன்னேற்றம்: பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக இன்றைக்கு பல நிர்வாக ரீதியான முன்னேற்றங்களையும் பொருளாதாரத்தில் நல்ல சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது. விற்பனையை பொருத்தவரை கடந்த ஆண்டு விட 23 சதவீதம் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பாக அவர்களுக்கு நிலையான வருவாய் ஏற்படும் வகையில் மொத்த விற்பனையாளர் மூலமாக ஆவின் பொருட்களின் விற்பனையானது ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் அளவில் விற்பனை நடந்திருக்கிறது.
அந்த விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கொடுப்பது போல் ஆவின் மார்க்கெட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் உள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் அதில் இருக்கக்கூடிய அங்காடிகள் மூலமாகவும் பொருட்கள் விற்பனைக்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட துறையோடு பேசி வருகின்றோம். இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
புது திட்டங்கள்: இந்த ஆண்டு விவசாயிகளுக்கான கடன் அதிகரிக்க திட்டமிருக்கிறோம். விவசாயிகளுக்கும் கால்நடை பராமரிப்புக்கும் வட்டி கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் தீவனங்கள் தரம் உயர்த்தப்பட்டு மார்க்கெட்டில் மிக குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புதிதாக 50 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி தொடங்கும் திட்டம் உள்ளது.
இந்த ஆண்டு விவசாயிகளை மையப்படுத்திய ஆவின் பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு அதற்கான பணிகளை தொடங்க இருக்கிறோம். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை அதை முடிந்த அளவுக்கு செய்து இருக்கிறோம்.
தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கையாளுவது சாதாரண விஷயம் அல்ல போக்குவரத்து, பால் சேமித்து வைப்பது பல பிரச்சனைகள் உள்ளது. அதனை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம். கடந்த காலத்தை ஒப்பிடும்போது ஆவின் மிக முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் பால் உற்பத்தி வழங்கி வருகிறது.
ஆவினுக்கு பாதிப்பா?: அமுல் நிறுவனம் நிறுவப்பட்டாலும் அதனால் ஆவினுக்கு பாதிப்பு ஏற்படாது. மக்கள் ஆவினை விரும்புகிறார்கள், ஆவினை நம்புகிறார்கள். மற்ற பொருட்களின் விலையை விட ஆவின் பொருட்கள் விலை குறைவு. ஒவ்வொரு பொருளுக்கும் தரமான உற்பத்தியை கொடுத்து வருகிறோம். இந்த ஆண்டு இறுதியில் ஒரு நாளில் 40 லட்சம் லிட்டராக பால் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
சில நேரங்களில் சில ஒப்பந்ததாரர்களால் பிரச்சனை ஏற்படுகிறது. அதை உடனடியாக சரி செய்துவிட்டோம். பால் விநியோகம் அரை மணி நேரம் கால தாமதம் ஆனாலும் அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. பால் கொள்முதல் விலை ஆறு ரூபாய்க்கு ஏற்கனவே உயர்த்தி இருக்கிறோம். தற்போதைய சூழலில் விவசாயிகளின் கோரிக்கையாக இருப்பது அந்த கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதுதான்.
இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு இல்லாமல் ஒரு முடிவு எடுக்கப்படும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 350-க்கும் மேற்பட்ட சொசைட்டிகளில் ஆவின் உற்பத்தியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.