கும்பகோணம்: மனித உடலின் சிறந்த இரத்த அழுத்த அளவீடு என்பது 120க்கு 80 எம்எம்எச்ஜி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17ம் நாள், உலக உயர் இரத்த அழுத்த நாளாக கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்படும், உலக உயர் இரத்த அழுத்த லீக் (டபுள்யூ.எச்.எல்) என்ற அமைப்பு, 'உயர் ரத்த அழுத்த துல்லியமான அளவீடு, கட்டுப்பாடு மற்றும் நீண்ட கால வாழ்க்கை' என்பதை கருப்பொருளாக கொண்டு, 2024ம் ஆண்டின் இத்தினத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
உயர் இரத்த அழுத்தமானது மாரடைப்பு, மூளை அடைப்பு, மூளை ரத்த நாளங்களை பாதிப்பது, பக்கவாதம், சீறுநீரக பாதிப்பு, பார்வை இழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள், போதுமான உடற்பயிற்சி, அதிக எடையுள்ளோர் எடையை குறைப்பது, தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றின் மூலம் இதனை கட்டுப்படுத்திட முடியும்.
என்ன காரணம்?: உயர் இரத்த அழுத்தம் மரபியல், வயது, மருத்துவ நிலை மற்றும் வாழ்க்கை முறையினாலும் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு குறிப்பிட்ட அறிகுறி என்று எதுவுமே இல்லை என கூறப்படும்போதும், சிலருக்கு தலைவலி, நெஞ்சுவலி, சோர்வு, மூச்சு திணறல், மயக்கம் மற்றும் சிறுநீரில் ரத்தம் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இருப்பி னும் பலருக்கு பாதிப்பு ஏற்படும் வரை உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியை கண்டறிய முடியாது என்பதால், இதனை 'அமைதியான கொலையாளி' என மருத்துவ வட்டாரம் குறிப்பிடுகிறது.
எந்த வயதினருக்கு எவ்வளவு பாதிப்பு?: உலக அளவில், 60 வயதிற்கு மேற்பட்டோரில் 63.15 சதவீதம் பேரும், 40 முதல் 59 வயதிற்குட்பட்டோரில் 33.2 சதவீதத்தினரும், 18 முதல் 39 வயதினரில் 7.5 சதவீதத்தினரும் உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் மகாமகக் குளக்கரை அண்ணா சிலை அருகே, அபிநயா கலை குழுமத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் நேற்றிரவு (மே 16) விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பல்வேறு பாடல்களுக்கு நடனங்கள்ஆடியும், சிலம்பம் சுற்றியும் உயர் இரத்த அழுத்தம் குறிதது பொதுமக்கள் மத்தியில் அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க:கோலாகலமாக நடைபெற்ற கீழ மைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் தேர் பவனி! - Holy Forest Chinnappar Temple