சேலம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி வெண்ணிலா (26). இவருக்கு கடந்த 5ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்த பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் படி சேலம் டவுன் உதவி ஆணையர் ஹரிசங்கரி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் அந்த பெண்ணை குழந்தை போலீசார் மீட்டனர்.
பின்னர், குழந்தையை 4 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சேலம் மாவட்டம் காரிப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் வினோதினி (24). இன்ஜினியரிங் படித்த இவர், தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். திருச்சியை சேர்ந்த அகிலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், வினோதினி கர்ப்பமாக இருந்த நிலையில் நான்காவது மாதத்தில் கரு கலைந்துள்ளது. அது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து, மேலும் கர்ப்பமாக இருப்பது போல் நடித்துக் கொண்டு இருந்தார். பின்னர் அவருக்கு ஏழாவது மாதத்தில் வளைகாப்பும் நடந்துள்ளது.
இதனிடையே, 12ஆம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் குழந்தை வேண்டும் என பல இடங்களில் வினோதினி தேடி வந்துள்ளார். சமீபத்தில் சேலம் அரசு மருத்துவமனைக்கு உறவினர் ஒருவருடன் வந்தபோது, மருத்துவமனையில் குழந்தையை கடத்தி குழந்தை பிறந்ததாக தெரிவித்து உறவினர்களிடம் மறைத்துவிட முடிவு செய்தார்.
அதன்படி சேலம் மருத்துவமணையில் இருந்த வெண்ணிலாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதனிடையே, குழந்தைக்காகன மருந்தை உறவினர்கள் வாங்க சென்றபோது, குழந்தையுடன் வினோதினி மாயமாகியுள்ளார். மேலும், அவர் சேலம் மருத்துவமனையில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ஆட்டோவில் சென்றதும், அங்கிருந்து தனியார் பஸ் மூலம் வாழப்பாடி இறங்கி, பைக்கில் வந்தவரிடம் உதவி கேட்டு முத்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக உறவினர்களிடம் வினோதினி தெரிவித்துள்ளார். அவரது உறவினர்களும் வந்து பார்த்து சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் தெரிய வந்ததும் வினோதினி கைது செய்யப்பட்டார். மேலும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது" என போலீசார் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடுவானில் பயணிக்கு நெஞ்சுவலி! பறிபோன முதியவர் உயிர்!