தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள கூசாலிபட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பார்வதி. இவர் மாவு வியாபாரம், ஜவுளி வியாபாரம், தீபாவளி சீட்டு போன்றவற்றையும் நடத்தி வந்துள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பணத்தைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கூசாலிபட்டி பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், “கூசாலிபட்டி சேர்ந்த பார்வதி என்ற பெண் தங்களின் ஆவணங்களை வைத்து 23 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாகவும். தற்போது, வாங்கிய பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தினை பெற்றுத் தருமாறு புகார் அளித்துள்ளனர். மனுவினை பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி.வெங்கடேசன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், "பார்வதி என்பவர் ஜவுளி வியாபாரம், மாவு வியாபாரம், தீபாவளி பண்டு போன்றவற்றை நடத்தி வந்ததால் அப்பகுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். இதனை நம்பி அவருக்குத் தனியார் நிதி நிறுவனங்களில் தங்களது ஆவணங்களைக் கொடுத்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் பணம் வாங்கி கொடுத்தோம்.
இதனையடுத்து, கொஞ்சம் நாள்கள் பார்வதி சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்குப் பணத்தினை செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவர் பணம் செலுத்தவில்லை. இதனால், தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தங்களைப் பணத்தினை செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து பார்வதியிடம் கேட்கச் சென்ற போது, "அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சரியான பதில் கூறவில்லை. மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவர் வீட்டில் இல்லை என்று கூறுகின்றனர். இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தங்கள் பெயரில் கடனை பெற்று விட்டு, பார்வதி தலைமறைவாகி விட்டதால் தற்பொழுது தங்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். மேலும், தங்களது குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டு வருவதாகக் கண்ணீருடன் மல்கத் தெரிவித்துள்ளனர்".
12 நிறுவனங்கள்: தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் பார்வதி என்பவர் 12 தனியார் நிதி நிறுவனங்களில் தனி நபர் லோன், மாடு வாங்குவதற்கு லோன் என பல்வேறு கடன்கள் வாங்கியுள்ளனர். ஒவ்வொருவரின் பெயரிலும் 1 முதல் 3 லோன்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணத்தினை பெற்று பார்வதி மோசடி செய்துள்ளதாகப் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் பார்வதியின் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக கும்கிகளின் உதவியை நாடிய ஒடிசா அரசு.. காரணம் என்ன?