சென்னை: சென்னை ஐ.சி.எப் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன். இவர் ஏசி மெக்கானிக்காக இருந்து வருகிறார். இவரது சகோதரி ஹேமமாலினி. இந்நிலையில், நேற்று இரவு வெங்கடேசன் தனது சகோதரி ஹேமமாலினியை பைக்கில் அழைத்துக் கொண்டு சென்னை திருமங்கலம் 100 அடி சாலை, 18வது பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கனமழையால் சாலையின் பள்ளத்தில் நிலை தடுமாறி வெங்கடேசனும், அவர் தங்கை ஹேமமாலினியும் கீழே விழுந்துள்ளனர். அதை கவனிக்காத எதிர்புறம் வந்த லாரி ஓட்டுநர், லாரியை கீழே விழுந்திருந்த ஹேமமாலினி மீது ஏற்றியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இதில் வெங்கடேசனுக்கு காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஹேமமாலினி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியுடன் தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல், அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரேணுகா என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவனமான டி.எல்.எஃப் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு பணி முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது டி.எல்.எஃப் வளாகத்தின் முன்பு இரும்புத் தகடு கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், பலத்த காற்று வீசியதால் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த ரேணுகா மீது இரும்புத் தகடு விழுந்தது.
இதில் ரேணுகாவிற்கு வயிறு, கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் ரேணுகாவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், ரேணுகா வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தரமணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டை காலி செய்வதாக கூறியதால் மின்சாரம், தண்ணீர் கட்.. பெண் வெளியிட்ட வீடியோ