மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இரண்டாவது மகள் தீபா (வயது 34). எம்.பி.ஏ பட்டதாரியான இவரும், மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டை குலாம்மைதீன் மகன் இப்ராஹிம் (35) என்பவரும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் 2016ஆம் ஆண்டு இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தீபா இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் தனது பெயரை அத்திபா என்று மாற்றி கொண்டார்.
இப்ராஹிம் - அத்திபா தம்பதிக்கு 2 ஆண்டுகளுக்கு பின்னர் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இப்ராஹிம் தனது பெற்றோர் குலாம் மைதீன் - பாத்திமா மற்றும் அண்ணன் அப்துல்லா, அவரது மனைவி ஹாஜிரா உடன் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்துல்லாவும், இப்ராஹிமும் தற்போது துபாயில் வேலை செய்து வரும் நிலையில், இப்ராஹிம் தான் சம்பாதிக்கும் பணத்தை அண்ணனிடமே கொடுத்து வந்து அண்ணணின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அத்திபா தனது கணவரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று வற்புறுத்தியதால், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தனிக்குடித்தனம் அனுப்ப முடியாது. ஒற்றுமையாக வாழலாம் இல்லையென்றால், பிள்ளைகளை விட்டுவிட்டு நீ மட்டும் வெளியே சென்றுவிடு என்று கணவரின் அண்ணன் மற்றும் குடும்பத்தார் பேசியதாக கூறப்படுகிறது.
கணவன் - மனைவி வாழ்க்கைக்குள் கணவனின் அண்ணன் மற்றும் அவரது மனைவி தலையிடுவதால் மன உளைச்சலுக்கு உள்ளான அத்திபா நேற்று காலை பல்லவராயன்பேட்டை வீட்டில், "இவர்களிடம் என்னால் இருக்க முடியாது. நான் இறந்த பிறகு என் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று செல்போனில் வீடியோ எடுத்து, அதை பெற்றோருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த பிறகு அத்திபாவின் வீட்டிற்கு சென்று பெற்றோர் பார்த்த போது அத்திபா தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலாடுதுறை போலீசார், அத்திபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பிரிவு 194 கீழ் இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்திபா பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதனை சுட்டிக்காட்டி பேசி மனஉளைச்சலை ஏற்படுத்தி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு ஆளாக்கிய அத்திபா கணவரின் அண்ணன் அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய வேண்டும், இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கைக்கு வழிவகை செய்ய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி அத்திபாவின் உறவினர்கள் உடலை பெறாமல் மருத்துவமனையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அத்திபாவிடம் கணவரின் அண்ணன் அப்துல்லா, வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறு கூறி வாக்குவாதம் செய்யும் ஆடியோவையும் காவல்துறை வசம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அத்திபாவின் சகோதரர் ராஜா கூறுகையில், "பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அக்காவை, அவரது கணவர் குடும்பத்தினர் அதனை குத்திக்காட்டி பேசி, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்ய வைத்துள்ளனர். எனவே இதற்கு காரணமான அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சட்ட விரோதமாக சிம் கார்டு விற்பனை.. சென்னை தனியார் கால் சென்டரில் அதிரடி சோதனை! - chennai call center raid