சென்னை: நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி, கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சி துவங்கினாலே முதல் மாநாட்டை பெரும்பாலும் தென் மாவட்டங்களிலேயே நடத்துவது வழக்கம்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டியை விஜய் தேர்ந்தெடுத்தது ஏன்? விஜய்க்கு மாநாட்டிற்கு அழுத்தம் உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ஷபீரிடம் ஈடிவி பாரத் முன்வைத்தது.
இதற்கு பதில் அளித்த அவர், “தவெகவின் திட்டம் திருச்சியில் மாநாடு நடத்துவதாக இருந்தது. ஏனெனில், பெரும்பாலான கட்சிகள் மாநாட்டை திருச்சியில் நடத்துவார்கள். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 3 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடலாம்.
கூட்டத்தை சேர்ப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதால், தவெகவும் திருச்சியில் தான் இடத்தை தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் இடம் கிடைப்பதில் தவெகவிற்கு சிக்கல் ஏற்பட்டது. திருச்சி மட்டுமல்லாமல், தஞ்சாவூர் பக்கமும் இடத்தை தேடினார்கள். காலை தருகிறேன் என கூறுபவர்கள் மாலையில் தயங்குகிறார்கள்.
மேலும், திருச்சியில் தனியார் அமைப்புகளிடம் இடம் கேட்கும் போது, அமைச்சரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என கூறுகிறார்கள். இடம் கொடுத்துவிட்டால் பிரச்னை ஏதாவது வருமோ என தனியார் இடம் வைத்திருப்பவர்கள் அஞ்சுகிறார்கள். மேலும், திருச்சியில் அனுமதி வாங்குவதில் குறிப்பிட்ட அதிகாரி பிரச்னை செய்வார்கள் என தவெக நினைத்தார்கள்.
இதனால் திருச்சியில் இடம் கிடைக்கவில்லை என்பதால், விழுப்புரம் விக்கிரவாண்டியில் ஒரு இடம் தேர்வு செய்துள்ளார்கள். 200 ஏக்கர் தேவைப்பட்ட நிலையில், 85 ஏக்கர் தான் கிடைத்துள்ளது. தவெக 2 லட்சம் முதல் 5 லட்சம் தொண்டர்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அதை பார்த்து தான் விக்கிரவாண்டியை தேர்வு செய்துள்ளனர்” என்றார்
மற்ற கட்சிகளின் முதல் மாநாடு மதுரையில் நடந்தது குறித்து கேட்ட போது, “தேமுதிக முதல் மாநாடு மதுரையில் நடந்ததற்கு காரணம், அந்த ஊர் விஜயகாந்தின் அடையாளமாக விளங்கிய மாவட்டம் ஆகும். கமல்ஹாசன் திருச்சியில் தான் முதல் மாநாட்டை நடத்தி இருக்க வேண்டும். யாரோ தவறான ஆலோசனை வழங்கியதால் மதுரையில் நடந்தது. அப்போது கூட்டம் பெரிதாக வரவில்லை.
விஜய்க்கு இடம் ஒரு பிரச்னையாக இருக்காது, எங்கு மாநாடு நடத்தினாலும் கூட்டம் வரும். அதனால் தான் வாகன நிறுத்தும் இடம், அனைத்து வசதிகளையும் ஏற்றார் போல் இடம் தேர்வு செய்துள்ளார்கள். புதுச்சேரியை கவனம் செலுத்துவதற்காக மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தவில்லை. தேவையென்றால் ஒரு மாநாட்டை தனியாக அங்கு நடத்திக் கொள்ள முடியும். அவர்களுக்கு இடம் சிக்கல் என்பதால் தான் விக்கிரவாண்டியை தேர்வு செய்துள்ளனர். தேமுதிக வாக்குகள் பெறுவதற்காக வட மாவட்டத்தை மாநாட்டிற்கு தேர்வு செய்தனர் என கூற முடியாது” என்றார்.
தவெக கொடி குறித்து கேட்ட போது, “த.வெ.க கொடியில் யானை இருப்பது பிரச்னையாக இருக்காது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, தேர்தல் சின்னத்தில் மட்டும் தலையிட முடியும், கட்சி கொடியில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஒரு மாநாட்டை நடத்துகிறார்கள் என்றால் இடையூறுகள் வரும், அதைத் தாண்டி எதிர்கொண்டு தான் மாநாட்டை நடத்த முடியும்” என்றார்.
மேலும் பேசுகையில், “காவல்துறை அனுமதி, தீயணைப்புத்துறை அனுமதி உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குறியாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணம் கூறி பிரச்சனை செய்யலாம் அதை எதிர்கொண்டு திட்டமிட வேண்டும். ஆளும் கட்சி தரப்பில் அழுத்தம் வரும், நேரடியாக வராது. மறைமுகமாக வந்து கொண்டு தான் இருக்கும். விஜய் கட்சி ஆரம்பிப்பதால் யாருக்கு பலம், பலவீனம் என்பது இப்போது சொல்ல முடியாது. அவரின் கொள்கை என்ன? யாருக்கு சவால் விடுகிறார்? என்பதை பொறுத்து தான் மக்களும் முடிவை எடுப்பார்கள்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: செப்.23இல் விக்கிரவாண்டியில் த.வெ.க மாநாடு?... 1.5 லட்சம் பேருடன் 150 ஏக்கரில் பிரமாண்டமாக நடத்த திட்டம்! - TVK MAANADU VIKRAVANDI