திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பாஜக சார்பாக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. இதில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி, பாஜகவின் கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு, அதன் வேட்பாளராக திலகபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். இக்கூட்டத்தில் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் பேசுகையில், “அரசியல் அனாதை கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் கட்சிக்கு சமாதி கட்ட வேண்டும். பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் தடை செய்யப்பட்ட பிரிவு தான் எஸ்டிபிஐ. இந்த எஸ்டிபிஐ வேட்பாளர் தான், தற்போது அதிமுக கூட்டணியில் போட்டியிடுகின்ற முகமது முபாரக் என்பவர். இவர் என்ஐஏ விசாரணைக் கைதியாக இருந்தவர்” என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் திலகபாமா, “மக்கள் 3வது முறையாக பிரதமர் மோடி மீண்டும் வர வேண்டும் என நினைக்கின்றனர். திண்டுக்கலைப் பொறுத்தவரை, ஏற்கனவே திமுக 39 எம்பிக்களை வைத்திருந்தும், எதுவும் வாங்கி வந்து தர முடியவில்லை என்கின்றனர். எஸ்டிபிஐக்கு பிரதமர் யார் எனும் கேள்வியே இல்லை. உண்மையில் மக்களுக்கான திட்டங்களை பிரதமரிடம் இருந்து பெற்று வந்து மக்களுக்கு சேர்ப்பதற்கான உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒரே வேட்பாளர் நான் மட்டும் தான்” என கூறியுள்ளார்.
எதிர் வேட்பாளரை தீவிரவாதியாக சித்தரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக வேட்பாளராக நிற்கும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக், தேசத்துரோகவாதியாக காட்டப்பட்டவர், விசாரணை வளையத்திற்குள் இருக்கக்கூடியவர், அவருக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்? மக்களுக்கு தெரிந்திருக்கிறது, அவர் எம்ஜிஆர் இல்லை, நம்பியார் என்பது” என்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாமகவிற்குள் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதா என்பதற்கு, “செயல்பாடுகள் சரியாக இல்லை என்றால் மருத்துவர் கறாராக இருப்பார். பாஜக, பாமகவிற்கு வாக்கு கேட்க வேண்டும் என அவசியமே இல்லை ஆனால், ஒருங்கிணைந்து செயல்பட்டுக்கொண்டுள்ளோம். ஓரிருவர் இப்படி வருவது இயல்பு தானே.
முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்த ஜோதி முத்து, சரியாக கட்டமைப்பு இல்லாததால் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒரு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர், தலைமைப் பண்பை ஏற்று செயல்படக்கூடியவர் என்பதை அவர் புரிந்திருக்க வேண்டும். ஒரு உத்தரவு என்றால் அனைவரும் கீழ்படிய வேண்டும். உத்தரவிற்கு கீழ்படியாமல் இருக்கும் போது கட்சி நடவடிக்கை எடுக்கிறது.
சிறுபான்மையினர் எதிர்ப்பு உள்ளதா எனும் கேள்விக்கு பதிலளித்த அவர், “அப்படி ஒரு சித்தரிப்பை திமுக உருவாக்கிக்கொண்டே இருந்தது, பாபர் மசூதி பிரச்னையாக இருந்த நிலம், இன்றைக்கு அயோத்தி கோயிலாக மாறி, எல்லோரும் அமைதியாக சென்று கொண்டுள்ளனர். எந்த பிரச்னையும் இல்லை, நிலத்தின் பெயரும், சூழலும் மாறியுள்ளது. இருவரையும் பிரிவினையாக வைத்தே சண்டையை உருவாக்கிக் கொண்டிருந்த காங்கிரசும், திமுகவும் இன்று காலாவதியாகி, எல்லோரையும் அரவணைத்து, சுமூகமான உறவுகளை பிரதமர் ஏற்படுத்தியிருக்கிறார்.
கட்சி இல்லாமல் போகப்போகிறதென்ற பதட்டத்தில் உள்ளனர், அதிமுகவினர். பாமக வேடந்தாங்கல் சரனாலயமாக எல்லோருக்கும் இருந்திருக்கிறது. எல்லோரையும் அரவணைக்க காத்திருக்கிறோம், இன்றைக்கு தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் யார் என சொல்லாமல் எப்படி கூட்டணியைப் பற்றி யோசிக்க முடியும்?
எங்களுக்கு தேச நலன் முக்கியம், அதற்கு மோடியைக் கொண்டு வரவேண்டும் என்பது முன்பே உறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போது எங்கள் ஆசை பிரதமர் மூலம் வரும் எல்லா திட்டங்களும், இந்தியாவின் தென்கோடி வரைக்கும் பிரதிபலித்திருப்பதற்குச் சான்றாக திண்டுக்கலை வென்று அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்தார்
ஒரு இரவுக்குள் அதிமுகவுடன் கூட்டணியை நிறுத்தி, பாஜகவுடன் சேர்ந்ததன் காரணம் என்ன என்ற கேள்விக்கு, “பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த திட்டமிடல் அதிமுகவிற்கு இல்லை. இந்திய தேசத்தை பற்றிய திட்டமிடலும் இல்லை, பிரதமர் வேட்பாளரை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. தேசத்தைப் பற்றி பேசத் தெரியாதவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும், அதனால் தான் உடனடியாக கூட்டணியை முறித்து பாஜகவுடன் சேர்ந்தோம்” என தெரிவித்துள்ளார்.